அரியலூர்
கடையின் ஓடுகளை உடைத்து பணம் திருட்டு
|கடையின் ஓடுகளை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி(வயது 52). இவர் மீன்சுட்டி கடைவீதியில் 'பேன்சி' ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல் அவர் கடையை திறக்க வந்தபோது, கடையின் மேற்புறமுள்ள சிமெண்டு ஓடுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.27 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதையடுத்து கடையின் மேற்கூரை ஓடுகளை மர்ம நபர்கள் உடைத்து, கடைக்குள் புகுந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆசைத்தம்பி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.