கரூர்
வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகைகள் கொள்ளை
|வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தோகைமலை,
நகைகள் கொள்ளை
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி நாவல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்தனம். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 60). இந்தநிலையில் ராஜம்மாள் தனது வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த அஞ்சலை என்பவர் ராஜம்மாள் வீட்டின் முன்பு சென்று கொண்டிருந்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.இதுகுறித்து உடனடியாக ராஜம்மாளுக்கு போன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ராஜம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது அவரது பீரோ உடைக்கப்பட்டு, அதில் ரகசிய அறையில் வைத்திருந்த 4 பவுன் 5 கிராமம் எடை கொண்ட தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் பீரோவில் இருந்த துணி மணிகள் அனைத்தும் வீட்டினுள் சிதறி கிடந்தது.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து ராஜம்மாள் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.