தென்காசி
தோட்டங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்-தென்னை மரங்கள் சேதம்
|புளியங்குடியில் தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள் தென்னை, எலுமிச்சை மரங்களை சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
புளியங்குடி:
புளியங்குடியில் தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள் தென்னை, எலுமிச்சை மரங்களை சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
காட்டு யானைகள்
தென்காசி மாவட்டம் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் ஏராளமான விவசாயிகள் தென்னை, எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் கோடைக்காலத்தையொட்டி தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
புளியங்குடி பீட் பகுதியில் உள்ள சில தோட்டங்களில் நேற்று முன்தினம் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை வேருடன் சாய்த்து குருத்துகளை தின்றன. எலுமிச்சை மரங்களையும் சாய்த்து துவம்சம் செய்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இழப்பீடு வழங்க...
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரையிலும் சுமார் 200 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளன.
எனவே விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகாதவாறு வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.