< Back
மாநில செய்திகள்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல், கண்கள் தானம்- அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
மதுரை
மாநில செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல், கண்கள் தானம்- அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

தினத்தந்தி
|
14 Oct 2023 1:30 AM IST

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டது. மேலும் அரசு மரியாதையுடன் அவரது இறுதி சடங்கு நடந்தது.

பெண் மூளைச்சாவு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 39). நேற்று முன்தினம் இவர் ஒரு விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்விக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். மேலும் மூளையின் செயல்பாடு முற்றிலுமாக இழக்கப்பட்டிருந்த போதிலும் கூட, தமிழ்ச்செல்வியின் உடலில் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல்மற்றும் கண்கள் உள்பட பிற உடலுறுப்புகள் நன்றாகவே இயங்கிக் கொண்டிருந்தன.இந்த நிலையிலுள்ள நோயாளிகள் "மூளைச்சாவு ஏற்பட்ட நபர்கள்" என டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர்.

உறுப்புகள் தானம்

அவரது மூளைச்சாவு நிலை குறித்து குடும்பத்தினரிடம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் டாக்டர்கள் குழு விளக்கமாக எடுத்துக்கூறியது. மேலும் அவரின் பிற உடலுறுப்புகள் நன்கு செயல்படும் நிலையில் இருப்பதால், அவற்றை தானம் செய்வதன் மூலம் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற பல நோயாளிகளிள் உயிரை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பிற நோயாளிகளின் உயிரைக் காக்க உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டார்.

மூளைச்சாவு ஏற்பட்ட தமிழ்ச்செல்வியின் உடலுறுப்புகளை தானமாகப் பெறுவதற்கு அரசு அதிகாரிகளிடம் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி நிர்வாகம் தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் அனுமதி கோரி விண்ணப்பித்தது. சூழ்நிலையின் அவசர நிலையைப் புரிந்துகொண்ட தமிழக அரசும் அதற்கு உரிய சட்ட ரீதியான அனுமதியை வழங்கியது.

அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

பின்னர் டாக்டர்கள் தமிழ்ச்செல்வியின் உடல் உறுப்புகளை எடுக்கும் மருத்துவ செயல்முறை வெற்றிகரமாக மேற்கொண்டனர். அதை தொடர்ந்து மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளுக்கு ஒரு சிறுநீரகமும் மற்றும் கல்லீரலும் உறுப்பு மாற்று சிகிச்சையில் பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

கண்கள் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் உயிர் பிழைப்பதற்காக கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டு வரும் 5 பேருக்கு மறு வாழ்வு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உறுப்புதானம் செய்தவர்களை கவுரவிப்பதற்காக அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதை உடன் நடத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி தமிழ்ச்செல்வியின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது. அவரது உடலுக்கு கலெக்டர் சங்கீதா மலர் வளையம் வைத்து அரசு சார்பில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி, மேலூர் தாசில்தார் செந்தாமரை உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்