சென்னை
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம் - 8 பேர் மறுவாழ்வு பெற்றனர்
|விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அமைந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த 33 வயது வாலிபர், கடந்த 2-ந் தேதி செங்குன்றம் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வாலிபரின் சிறுநீரகம், நுரையீரல், கண், இதயம் உளள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
அவரது சிறுநீரகம், தீவிர சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 41 வயது பெண்ணுக்கு, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம், இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து தனியார் ஆஸ்பத்திரியில் காத்திருந்த நோயாளிகளுக்கு அரசு வழிமுறைப்படி வழங்கப்பட்டது.
தானம் செய்யப்பட்ட தோல் மற்றும் இரு கண்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேமிக்கப்பட்டு தீ காயமடைந்த நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும்.
மூளைச்சாவடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி தெரிவித்தார்.