சென்னை
மூளைச்சாவு அடைந்த ஐ.டி. ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் - 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்
|மூளைச்சாவு அடைந்த ஐ.டி. ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 24). இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.டி.) ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 22-ந்தேதியன்று இரவு பாரப்பட்டியில் மணிகண்ட பிரபு சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக 23-ந்தேதியன்று மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் மணிகண்ட பிரபு மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்ட பிரபு உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக கொடுக்க முன்வந்தனர்.
இந்த நிலையில், மணிகண்டபிரபுவின் உடல் உறுப்புகள் நேற்று பிரித்து எடுக்கப்பட்டன. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் திருச்சி கே.எம்.சி.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்த கொண்டு செல்லப்பட்டது.
இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. இதயம் மற்றும் நுரையீரலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் இருந்து 15 நிமிடத்தில் மதுரை விமான நிலையம் சென்றடைந்தது. ஆம்புலன்ஸ் சிக்னலில் நிற்காமல் விரைவாக செல்லும் வகையில் போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்தனர்.
இதேபோல மணிகண்ட பிரபுவின் கண் மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மணிகண்ட பிரபுவின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடல் உறுப்புகளை தானமாக கொடுத்து நோயாளிகளுக்கு மறுவாழ்வு கொடுத்ததற்காக மணிகண்ட பிரபுவின் குடும்பத்தினருக்கு டாக்டர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக விமான நிலையம் செல்வதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்ட போலீசாருக்கு மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி நிர்வாகம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
மேற்கண்ட தகவல் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.