< Back
மாநில செய்திகள்
இளம் வயதில் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர்கள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

இளம் வயதில் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர்கள்

தினத்தந்தி
|
12 May 2023 6:45 PM GMT

இயற்கையை ரசிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு கண்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஆனால் இந்த கண்களை பாதுகாப்பதில் நாம் பலரும் இன்று அலட்சியம் காட்டுவதால், பல்வேறு பின்விளைவுகளை சந்திக்கிறோம்.

கண்பார்வை மங்கி...

முதுமை வயதை அடைவதற்கு முன்பே கண்பார்வை மங்கி போவது, முதுமையில் அணிய வேண்டிய கண் கண்ணாடியை இளமையில் அணிவது உள்பட ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

முன்பு கண் கண்ணாடி அணிவதை ஒரு குறையாக பார்த்தனர். திருமண நிகழ்வுக்குக்கூட பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு காலத்தில் அது தடையாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றோ கண்ணாடி அணிவது நாகரிகமாக மாறத் தொடங்கிவிட்டது. இதன் விளைவு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் கண்ணாடி அணியும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

இளம் வயதினர்

தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சினை அதிகரித்து, கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இளம்வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நாகரிக வளர்ச்சி எதில் இருக்க வேண்டுமோ? அதில் இல்லாமல், மற்றவற்றில் ஊற்றி வளர்ப்பது, இன்று பெரிய அளவிலான பிரச்சினைகளை இன்றைய தலைமுறை சந்திக்க தொடங்கி இருக்கிறது. அதில் ஒன்றுதான் இளம் வயதிலேயே கண்ணாடி அணிவது. இதுதொடர்பாக ஆசிரியர், பெற்றோர், மருத்துவர் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.

மைதானங்களில் விளையாடுதல்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை கண் டாக்டர் ராஜா:- செல்போன், டி.வி.க்கள் பார்க்கும் பழக்கம் தற்போதைய குழந்தைகளிடம் அதிகமாக உள்ளது. மேலும் வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்து படிப்பு, செல்போன் பார்த்தலில் மூழ்கி விடுவதால் அவர்களது கண் பாதிக்கப்படுகிறது. இதில் பார்வைத்திறன் குறைபாடு ஏற்படுகிறது. கிட்டத்து பார்வை நன்றாக தெரியும். ஆனால் தூரத்து பார்வை சரியாக தெரியாது. இதனால் தான் சிறுவர், சிறுமிகள் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்யும் போது தான் அவர்களது பார்வை திறனில் குறைபாடு இருப்பது பெற்றோருக்கு தெரிய வருகிறது. குழந்தைகளை மைதானங்களில் விளையாட வைக்க வேண்டும். அப்போது அவர்களது பார்வைத்திறன் மேம்படும். மேலும் பார்வைத்திறனில் குறைகள் இருந்தால் தெரியவரும். மைதானத்தில் விளையாடும் போது கண்களில் தூரத்து பார்வை எளிதாக தெரியக்கூடிய வகையில் செயல்பாடு அமையும். இதனால் குறைபாடு வராது. மேலும் பாா்வைத்திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கண்ணாடி அணிவது நல்லது தான். அந்த பார்வை குறைபாடு மேலும் அதிகரிக்காமல் தடுக்கும். இதேபோல் உணவு வகைகளிலும் குழந்தைகளுக்கு காய்கறிகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடும் போது பெற்றோர்களும் காய்கறிகளை உண்ண வேண்டும். அப்போது தான் குழந்தைகளும் தங்களது பெற்றோரை பார்த்து காய்கறிகளை சாப்பிடுவார்கள். குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அதிக நேரம் செல்போன், டி.வி.க்கள் பார்ப்பதை தடுக்க வேண்டும். அதற்கு பதிலாக வெளியில் விளையாட அறிவுறுத்த வேண்டும்.

கற்றல் இழப்பு

மணமேல்குடி பட்டதாரி ஆசிரியர் சீனிவாசன்:- விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அனைத்து வீடுகளிலும், அனைத்து நபர்கள் கைகளிலும் சர்வ சாதாரணமாக செல்போன் உள்ளது. செல்போன் பயன்படுத்துவதின் மூலம் மாணவர்கள் கற்றல் இழப்பை அதிகளவில் சந்திக்கின்றனர். கொரோனா கால இடைவெளியில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இதர பொழுதுபோக்குக்காக செல்போன் பயன்பாடு மாணவர்களிடையே அதிகமாக இருந்ததால் நூற்றுக்கு 75 சதவீதம் பேர் கண் பார்வை குறைபாடு உடையவர்களாக மாறி உள்ளனர். கண்ணாடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மேலும் தொடராமல் இருக்க செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது நேரடி வகுப்பு நடைபெற்றாலும் செல்போன் மூலமாக நிறைய கற்றல் வளங்கள் தேடிப்பெற வேண்டிய சூழ்நிலையில் மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். எனவே தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மாதந்தோறும் மேற்கொள்ளவும், செல்போன் பயன்பாடு கட்டுப்பாட்டுக்குள் வரவும் நடவடிக்கை அவசியம்.

விழிப்புணர்வு இல்லை

கண்ணாடிகடை உரிமையாளர் அபுபக்கர்:- கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 வயதை கடந்தவர்கள் தான் கண் பார்வை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கண்ணாடி அணிந்தனர். ஆனால் தற்போது 5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண் பார்வை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கண்ணாடி அணிகின்றனர். காரணம், தற்போதுள்ள குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி உள்ளிட்டவை தான் அதிகளவில் தவிழ்கிறது. அதில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர்கள் கண் பார்வையை இழக்க வைக்கிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றில் நீண்டநேரம் செலவிடுதல், ஜீன் குறைபாடுகள், சுற்றுச்சூழல் குறைபாடுகள், கண்களின் வளர்ச்சியின்போது ஏற்படும் மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள், கண் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக தற்போது பள்ளிக்குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. இதனால் தற்போது பார்வை குறைபாட்டால் ஏராளமான சிறுவர்கள் கண்ணாடி அணிந்துள்ளனர்.

செல்போனில் விளையாட்டு

திருமயத்தை சேர்ந்த நர்சிங் மாணவர் பிரிதிப்ராஜ்:- தற்போது மாணவ-மாணவிகள் அதிகளவு செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின் விளக்கை அணைத்துவிட்டு செல்போன் மூலம் விளையாடுகின்றனர். அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. மேலும் சிலர் பொழுதுபோக்குக்காக டி.வி.யை அதிக நேரம் பார்த்து வருகின்றனர். இதனால் கண் பார்வை பாதிக்கப்பட்டு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறுகின்றனர். பின்னர் அவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடி வழங்கப்படுகிறது. தற்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும்பாலும் கண்ணாடி அணிந்துதான் செல்கின்றனர். இதை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை டி.வி. மற்றும் செல்போனை அதிகளவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

உணவு பழக்க வழக்கங்கள்

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி ஆமினா அம்மாள்:- தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பார்வை குறைபாடு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் இரவு நேரங்களில் தூங்காமல் நீண்ட நேரமாக செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பது மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் தான். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டனர். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தனர். தற்போது விளையாட்டு ஆர்வம் குறைந்து செல்போனில் மூழ்கிக்கிடக்கும் சமூகமாக மாறிவிட்டது. இதனால் இளைஞர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கண்ணாடி போடும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளை கண்காணித்து அவர்கள் அதிக நேரம் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதை தடுத்து நிறுத்துவதின் மூலம் பார்வை குறைபாட்டில் இருந்து மீளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்போம்

ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இருட்டில் பார்க்க முடியாமல் எப்படி திணறுகிறோம். அப்படி இருக்கும் போது கடவுள் நமக்கு அளித்த சிறப்பு பரிசான கண்களை நாம் சரியான முறையில் பாதுகாப்போம். அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வோடு இருப்போம்.

வளரும் நாடுகளில் பார்வை குறைபாடு அதிகரிப்பு

கடந்த ஆண்டின் (2022) இறுதியில் வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில், உலகம் முழுவதும் 28 கோடியே 50 லட்சம் பேர் பார்வை பாதிப்பு அடைந்தவர்களாக இருப்பதாகவும், அதில் 3 கோடியே 90 லட்சம் பேர் பார்வை இழந்தவர்களாகவும், 24 கோடியே 60 லட்சம் பேர் குறைந்த பார்வை திறன் உடையவர்களாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் வளரும் நாடுகளில் 90 சதவீதம் பேர் பார்வை குறைபாடுடையவர்களாக இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது.

இதுதவிர, ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை பார்வையற்றதாக மாறுவதாகவும், உலகில் 60 லட்சம் குழந்தைகள் பார்வையற்றவர்களாக மாறுவதாகவும், இவர்களில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் வாழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்களை பாதுகாக்க சிறிய 'டிப்ஸ்'

* வெளிச்சம் குறைந்த இடத்தில் படிப்பதை தவிர்க்க வேண்டும். பச்சை நிற காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

* கண்களுக்கு அதிக அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை கைவிடவேண்டும்.

* கண்களில் ஏதாவது சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வை இழப்பை தவிர்க்க முடியும்.

* இரவு படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு டி.வி., செல்போன், கணினி ஆகியவற்றை தவிர்க்க பழக வேண்டும். மாசு, தூசிகளினால் கண்கள் பாதிப்படையாமல் இருக்க, வெளியே சென்று வீடு திரும்பியதும் கண்களை தூய நீரில் கழுவ வேண்டும்.

* கண்கள் தொடர்பான பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.

மேலும் செய்திகள்