காஞ்சிபுரம்
சிறுவன் உயிரிழந்த விவகாரம்: நீச்சல்குள உரிமையாளரின் கணவர், மகன் கைது
|சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீச்சல் குள உரிமையாளரின் கணவர், மகன் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை எடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள நீலமங்கலம் பாரதியார் தெரு ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவருடைய மனைவி தாரிகா (வயது 35). இவர்களுடைய மகன்கள் சஸ்வின் வைபவ் ( 6), சித்விக் வைபவ் (2). கடந்த 7-ந்தேதி தாரிகா தனது மகன்கள் இருவரையும் அதே பகுதியில் உள்ள நீச்சல் குளத்திற்கு நீச்சல் பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்றார்.
பின்னர் இளைய மகனுக்கு உணவு கொடுப்பதற்காக தாரிகா சென்றார். திரும்பி வந்து பார்க்கும்போது மகன் சஸ்வின் வைபவ் நீச்சல் குளத்தில் மூழ்கி கிடப்பதை பார்த்த தாரிகா அலறி துடித்தார். சிறுவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். பரிசோதனையில் சஸ்வின் வைபவ் இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் முறையான அனுமதி பெறாமல் நீச்சல் குளம் இயங்கி வந்ததும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் செல்லுபடியாகும் உரிமம் ஏதுமின்றி நீச்சல் குளம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் மற்றும் மீட்பு குழு பாதுகாப்பு இன்றி நீச்சல் குளம் இயங்கி வந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் நீச்சல் குளத்திற்கு நீச்சல் பயிற்சிக்கு வருபவர்களிடம் ஆரம்பத்தில் தலா ஒரு நபருக்கு ரூ.75 ரூபாய் பிறகு படிப்படியாக உயர்ந்தி ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலையில் குன்றத்தூர் தாசில்தார் நாராயணன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வீரராகவன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நீச்சல் குளத்திற்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக நீச்சல் குளத்தின் உரிமையாளர் விஜயலட்சுமி (57), அவருடைய கணவர் நாகராஜன், (66) மற்றும் அவரது மகன் பிரபு (37) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் குள உரிமையாளரின் கணவர் நாகராஜன், மகன் பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.