< Back
மாநில செய்திகள்
திருமணம் செய்ய மறுத்த காதலன்... வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம்
மாநில செய்திகள்

திருமணம் செய்ய மறுத்த காதலன்... வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம்

தினத்தந்தி
|
4 Feb 2024 2:41 AM IST

பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்ததாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார்.

ஈரோடு,

அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 24) அந்தியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் அந்தியூரை அடுத்த சமத்துவபுரம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 30) என்பவரை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இந்த நிலையில் சிவரஞ்சனியை, பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார். 2 பேரையும் அழைத்து பேசிய போலீசார், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போதும் பிரபாகரன், சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

தொடர்ந்து மீண்டும் நேற்று மதியம் 12 மணிக்கு மேல் கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை பிரபாகரன் வீட்டிற்கு வந்த சிவரஞ்சனி அவர் வீட்டின் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவரஞ்சனியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம்,'பிரபாகரன் திருமணம் செய்யும் வரை நான் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்' என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்