விபத்தில் உயிரிழந்த காதலன்... துக்கம் தாங்காமல் பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
|பெற்றோர் புதிதாக வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளில் சென்ற சாஜித், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பாரதி நகர் ஏ.இ.கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார்.
இவரும், திருவொற்றியூர் தியாகராயபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த அப்துல் சாஜித் (19) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்துல் சாஜித், தனது பெற்றோர் புதிதாக வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளில் சென்றபோது தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் காதலன் உயிரிழந்ததால் துக்கம் தாங்க முடியாமல் பரிதவித்த மாணவி, நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது வீட்டில் உள்ள அறைக்குள் சென்று மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெகுநேரம் ஆகியும் மகள் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அறைக்குள் சென்று பார்த்தபோது மகள், தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக அவரது தாய் ஜெகதீஸ்வரி அளித்த புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தற்கொலை செய்த மாணவிவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகிறார்.