கோயம்புத்தூர்
காதலன் போக்சோவில் கைது
|கோவையில், வலிப்பு ஏற்பட்டு இறந்த மாணவி கர்ப்பிணியாக இருந்த விவகாரத்தில், அவரது காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளஸ்-1 மாணவி சாவு
கோவையை சேர்ந்த 16 வயது மாணவி, அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த மாணவிக்கு கடந்த 10-ந் தேதி திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
7 மாத கர்ப்பிணி
இறந்த மாணவியின் உடல், கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது அம்பலமானது. இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் பள்ளி மாணவி தொடர்பான புகார் என்பதால், கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசார், அந்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
வாலிபர் கைது
அதில், அந்த மாணவியை பலாத்காரம் செய்தது, ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த பிரதீஷ் என்ற பிஜூ (வயது 19) என்பது தெரியவந்தது. உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும், அந்த கடைக்கு மாணவி சென்று வந்தபோது, அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பிஜூ பலாத்காரம் செய்ததால் மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.