< Back
மாநில செய்திகள்
சிறுவர்கள் கடினமான வேலைகளில் ஈடுபடுவதால் கைகள் புண்ணாகும் நிலை
திருப்பூர்
மாநில செய்திகள்

சிறுவர்கள் கடினமான வேலைகளில் ஈடுபடுவதால் கைகள் புண்ணாகும் நிலை

தினத்தந்தி
|
16 July 2023 12:19 AM IST

மடத்துக்குளம் பகுதியில் சில சிறுவர்கள் கடினமான வேலைகளில் ஈடுபடுவதால் கைகள் புண்ணாகும் நிலை உள்ளது.

கல்வி வழிகாட்டல்

மடத்துக்குளம் பகுதியில் காகித ஆலைகள், நூற்பாலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும் கொப்பரை உற்பத்தி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. தொழில் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ள நிலையில் தொழிலாளர் பற்றாக்குறையும் உள்ளது.

இந்தநிலையில் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடினமான பணிகளில் சிறுவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சிறுவர்கள் என்பவர்கள் எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் மிகப் பெரிய பொறுப்பைக் கொண்டவர்கள். அவர்களுக்கு சரியான கல்வியையும், முறையான வழிகாட்டல்களையும் வழங்க வேண்டியது அவசியமாகும். அதேநேரத்தில் சிறுவர், சிறுமிகளை பணியில் அமர்த்துவது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் தங்கள் சொந்த நிலத்தில் வேலை செய்வதோ, சொந்த வீட்டில் வேலை செய்வதோ குற்றமாக கருதப்படுவதில்லை.

கடினமான பணிகள்

இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியில் வேலைக்கு செல்லும் ஒருசில பெற்றோர் தங்கள் குழந்தைகளை தங்களுடன் வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர். குறிப்பாக தேங்காய் உரித்தல் உள்ளிட்ட கடுமையான பணிகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் பிஞ்சு கைகள் புண்ணாகி சிறுவர்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. பள்ளிக்கு செல்லாமல் எல்லா நாட்களிலும் வேலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு கடினமான பணிகளும் பழக்கமானதாக மாறிவிடுகிறது.

ஆனால் தொடர்ச்சியாக கடினமான வேலைகள் செய்யும் சிறுவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோருடன் வேலைக்கு செல்லும் சிறுவர்களே கடினமான பணிகளின் காரணமாக கைகள் புண்ணாகி அவதிப்படுகின்றனர். இன்றைய நிலையில் வீதிகளில் ஓடி விளையாடக் கூட நேரமில்லாமல் ஆண்டிராய்டு செல்போன்களின் பிடியில் சிறுவர்கள் சிக்கிக் கிடக்கின்றனர். அப்படியிருக்கும் போது கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ளும் நோக்கத்தில் சிறுவர்கள் வேலை செய்யலாம்.

உரிமை பறிப்பு

ஆனால் கடினமான பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதென்பது மெல்லிய மொட்டுக்களை தீயில் பொசுக்குவதற்கு சமமான செயல் என்பதை பெற்றோர் உணர வேண்டியது அவசியமாகும். இதனால் அவர்களின் கல்வி உரிமை மற்றும் சுதந்திரமாக வாழும் உரிமை பறிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே சிறுவர்கள் ஈட்டும் வருமானம் என்பது குடும்பத்துக்கு அவமானம் என்பதை பெற்றோர் உணர வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும் நல்ல எதிர்காலத்தையும் வழங்க வேண்டும்'. இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்