பெரம்பலூர்
கடப்பா கல் விழுந்ததில் சிறுவன் பலி
|கடப்பா கல் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தான்.
விளையாடினர்
பெரம்பலூர் மாவட்டம், ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணன். பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி இளவரசி. இவர்களது மகள் சுபத்ரா (வயது 9), மகன்கள் சுசிவின்ராஜ் (7), சுபிராஜ் (3).
இந்நிலையில் நேற்று ஊரில் ஒரு துக்க காரியத்துக்கு சரவணன் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு சுபத்ரா உள்ளிட்ட 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சாவு
அப்போது வீட்டின் சமையல் அறையில் பதிப்பதற்காக சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் திடீரென்று சரிந்து விளையாடி கொண்டிருந்த சுசிவின்ராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சரவணன், சுபத்ரா ஆகியோர் சுசிவின்ராஜின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுசிவின்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுசிவின்ராஜ் பெரம்பலூரில் உள்ள ஆர்.சி.பாத்திமா தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுசிவின்ராஜின் தாயான இளவரசி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் குழந்தைகளை, அவர்களது தந்தையான சரவணன் கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சுசிவின்ராஜ் இறந்துள்ளான். தாய் தற்கொலை செய்து 4 மாதங்களே ஆன நிலையில் எதிர்பாராதவிதமாக கல் விழுந்து மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.