< Back
மாநில செய்திகள்
லாரி மோதி சிறுவன் பலி
திருச்சி
மாநில செய்திகள்

லாரி மோதி சிறுவன் பலி

தினத்தந்தி
|
9 Oct 2023 3:19 AM IST

லாரி மோதி சிறுவன் உயிரிழந்தான்.

சிறுவன் சாவு

திருச்சி கைலாசபுரம் பெல்டவுன்ஷிப்பை சேர்ந்தவர் பெருமாள் (வயது 34). இவருடைய மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு சர்வேஷ்பாண்டியன் (6), தஸ்வந்த் (3) என 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை பெருமாள் தனது மனைவி, மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை பைபாஸ்ரோட்டில் சென்றார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சர்வேஷ்பாண்டியன் சிகிச்சை பலனின்றி இறந்தான். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

2 கடைகளுக்கு 'சீல்'

திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள ஒரு பீடா ஸ்டால் மற்றும் திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு கடை ஆகிய இரண்டு கடைகளிலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் அபராதங்கள் செலுத்தியபோதும், தொடர்ந்து விற்பனை செய்தனர். இதனால் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா பிறப்பித்த அவசர தடையாணை உத்தரவின்படி, திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 2 கடைகளுக்கும் நேற்று சீல் வைத்தனர்.

*மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாக்சம் பட்டேல்(24), ரெயில்வேயில் சோலார் பவர் பிளான்ட் ஒப்பந்த பணிக்காக தனது தந்தை பிரவீன்குமார் பட்டேல் (53) மற்றும் 2 பேருடன் திருச்சி வந்தார். கருமண்டபம் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்த நிலையில், நேற்று முன்தினம் பிரவீன்குமார் பட்டேல் கழிவறைக்கு சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பெண்கள் உள்பட 6 பேர் கைது

*திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே கஞ்சா வைத்திருந்த தினேஷ், தினேஷ்குமார், வீரா, கலை ஆகிய 4 பேரை கோட்டை போலீசார் கைது செய்து, 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் எடைமலைப்பட்டிபுதூர் கோத்தமங்கலம் ஏரி அருகே பிரியா (48), முழுமதி (60) ஆகிய 2 பேர் கஞ்சா விற்றதாக எடைமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

*சமயபுரம் அருகே ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த மூதாட்டியை, ஜோசப் செல்வராஜ், அவரது மனைவி மார்சலின்சுமிதா ஆகியோர் மீட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்