< Back
மாநில செய்திகள்
பழனி அருகே காட்டுயானை தாக்கி சிறுவன் படுகாயம்
மாநில செய்திகள்

பழனி அருகே காட்டுயானை தாக்கி சிறுவன் படுகாயம்

தினத்தந்தி
|
27 May 2022 2:33 PM IST

பழனி அருகே தந்தையுடன் சென்ற சிறுவனை காட்டுயானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பழனி:


திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள சண்முகம்பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருடைய மகன் ஹரிதர்ஷன் (வயது 10) அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இன்று காலை 6 மணி அளவில் ஹரிதர்ஷன் தனது தந்தையுடன் அருகே உள்ள தொட்டிமடை ஓடை பகுதிக்கு காலைக்கடன் கழிக்க சென்றார். அப்போது திடீரென காட்டுயானை ஒன்று அங்கே வந்தது.

யானையை கண்டதும் இருவரும் ஓட்டம் பிடிக்க தொடங்கினர். ஆனால் யானை சிறுவனை தாக்கியது. இதில் காலில் பலத்த காயம் அடைந்த ஹரிதர்ஷன் வலியால் அலறினார். இதற்கிடையே யானை அங்கிருந்து சென்றுவிட்டது.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் சிறுவன் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

இதற்கிடையே பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த சிறுவனை பார்வையிட்டனர். தொடர்ந்து வனத்துறை சார்பில் உரிய உதவி செய்வதாக சிறுவனின் பெற்றோரிடம் உறுதி அளித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்