< Back
மாநில செய்திகள்
குன்றத்தூர் அருகே சுவரில் துளைபோடும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி - காப்பாற்ற முயன்ற சகோதரி காயம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூர் அருகே சுவரில் துளைபோடும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி - காப்பாற்ற முயன்ற சகோதரி காயம்

தினத்தந்தி
|
25 May 2023 2:56 PM IST

சுவரில் துளைபோடும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். காப்பாற்ற முயன்ற அவருடைய சகோதரி காயம் அடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா, பெரும்பொன்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). பிளம்பர். இவருடைய சகோதரி ராஜேஸ்வரி (35). இவர், திருமணமாகி குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், முரசொலி மாறன் நகரில் வசித்து வருகிறார்.

ராஜேஸ்வரி வீட்டில் புதிதாக 2 அறைகள் கட்டப்பட்டுள்ளது. அந்த அறைகளில் பிளம்பிங் வேலை செய்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் குன்றத்தூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பிளம்பிங் வேலை செய்வதற்காக துளைபோடும் எந்திரம் மூலம் சுவரில் துளைபோடும் பணியில் அய்யப்பன் ஈடுபட்டார். அப்போது சுவரில் இருந்த மின்சார வயரில் துளைபோடும் எந்திரம் உரசியதும் அய்யப்பன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் அவர் அலறினார். தம்பியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜேஸ்வரி, தம்பியை பிடித்து தள்ளினார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேஸ்வரி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்