சேலம்
நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியவாலிபர் கிணற்றில் மூழ்கி சாவு - ஆத்தூர் அருகே பரிதாபம்
|ஆத்தூர் அருகே நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர், கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர், கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கிணற்றில் பிணம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே விநாயகபுரம் அணைமேடு அருகே தென்னங்குடிபாளையம் செல்லும் வழியில் விவசாய கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆத்தூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிறந்த நாள்
விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தது ரெயில் நிலையம் கண்ணாடிமில் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சூர்யா (வயது 21) என்பது தெரிய வந்தது. இவர், 10-ம் வகுப்பு முடித்து விட்டு அங்குள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
சூர்யாவின் நண்பர் முருகனுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை பிறந்த நாளாகும். எனவே சக நண்பர்கள் 10 பேருடன் தென்னங்குடிபாளையம் பகுதிக்கு சென்று கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
உற்சாக குளியல்
அப்போது அங்குள்ள கிணற்றில் நண்பர்களுடன் சூர்யா குளித்ததாக தெரிகிறது. கிணற்றின் உரிமையாளர் சத்தம் போடவே, அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பிறகு மாலையில் சூர்யா, கிணற்று பகுதிக்கு வந்ததாகவும், கிணற்றின் உரிமையாளர், என்னவென்று கேட்ட போது, மோட்டார் சைக்கிள் சாவி தொலைந்து விட்டதாகவும், அதனை தேடி வந்ததாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.
கிணற்றின் உரிமையாளர் சென்று விடவே, சூர்யா கிணற்றில் மீண்டும் குளித்ததாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதற்கிடையே சூர்யாவை காணவில்லை என அவருடைய தந்தை ஆத்தூர் போலீசில் புகார் செய்து இருந்தார். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில்தான், விவசாய கிணற்றில் சூர்யாவின் உடல் மிதந்தது தெரிய வந்தது. சூர்யாவின் உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களது கண்களை கலங்க செய்தது.