ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி - 2 பேரை தேடும் பணி தீவிரம்
|திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகருக்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்து வேதம் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட பாடசாலையில் படிக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஆந்திராவை சேர்ந்த அபிராம் (13), மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத் (14), கோபாலகிருஷ்ணன் (12) ஆகிய 4 மாணவர்கள் சுற்றுலா பயணிகள் தங்கும் இடமான யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை 6 மணி அளவில் குளிக்கச் சென்றனர்.
பின்னர் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அதைத்தொடர்ந்து சுழலில் சிக்கிய அவர்களை ஆற்று தண்ணீர் இழுத்துச் சென்றது. இதில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் அதிர்ஷ்டவசமாக தடுமாறி தப்பி கரைக்கு ஓடி வந்தான். பின்னர் தன்னுடன் குளிக்க வந்த சக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய தகவலை தெரிவித்துள்ளான். உடனடியாக வேத பாடசாலையில் இருந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 25 பேர் விரைந்து வந்து வெள்ளத்தில் மூழ்கிய அந்த 3 மாணவர்களையும் தேடினர்.அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் முக்கொம்பு மேல் அணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.