ராணிப்பேட்டை
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
|ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
3-ம் வகுப்பு மாணவன்
ராணிப்பேட்டையை அடுத்த தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் துளசிராமன் (வயது 42). தனியார் தொழிற்சாலையில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (38), தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், மணிகண்டன் (7) என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
துளசிராமன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.
மின்சாரம் தாக்கி பலி
இதை கண்டு பயந்து போன மணிகண்டன் வீட்டிற்குள் ஓடி சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தொங்கி கொண்டிருந்த மின் ஒயரை மிதித்துள்ளான். இதனால் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தான். உடனடியாக சிறுவனை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.