ராமநாதபுரம்
கார் மீது லாரி மோதி சிறுவன் பலி
|கார் மீது லாரி மோதி சிறுவன் பலியானான்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தை சேர்ந்த கவுரிசங்கர்(வயது 43). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். அடுத்த வாரம் தனது கிராமத்தில் மகன்களுக்கு காதணி விழா ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக சென்னையில் இருந்து தனது ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். திருவாடானை அருகேயுள்ள பாரூர் கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி காரில் நேருக்கு நேர் மோதியது.
இதில் காரில் இருந்த கவரிசங்கரின் மனைவி காளீஸ்வரி(37), மகன் ராஜ் தீபன் (12), இளைய மகன் கிரன்தீப் (5), உறவினர் மகன் கதிர் (18) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் கிரண் தீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் தஞ்சை மாவட்டம் கண்ணந்தக்கோட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.