காஞ்சிபுரம்
வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் மின்கம்பி உரசி வாலிபர் கருகி சாவு - ரெயில் பெட்டி மீது ஏறியபோது பரிதாபம்
|வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பி உரசி வாலிபர் கருகி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வெளியிடங்களுக்கு ஏற்றி கொண்டு செல்ல தெற்கு ரெயில்வே சார்பில் சரக்கு ரெயில் முனையம் செயல்பட்டு வருகிறது.
வாலாஜாபாத் சரக்கு முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் பெட்டியின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறினார். அப்போது உயர் அழுத்த மின்கம்பி அவரது உடலில் உரசிய நிலையில் தீப்பிடித்து எரிய தொடங்கினார்.
இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் பதறியபடி கூச்சலிட்டனர். அதற்குள் அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு ரெயில்வே போலீசாரும், காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இறந்து போனவருக்கு 35 வயது இருக்கும். அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.