< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி - ஊஞ்சலில் விளையாடிய போது பரிதாபம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் அருகே சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி - ஊஞ்சலில் விளையாடிய போது பரிதாபம்

தினத்தந்தி
|
21 Sept 2023 1:02 PM IST

மீஞ்சூர் அருகே ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்தபோது சேலை இறுக்கி சிறுவன் பரிதாபமாக பலியானார்.

மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமம் நேதாஜி தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 50). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராசைய்யா (17). இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மேல் படிப்பு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று ஆறுமுகம் வெளியே சென்ற நிலையில் வீட்டில் உள்ள ஊஞ்சலில் ராசைய்யா விளையாடிக்கொண்டு இருந்தார். ஊஞ்சல் கட்டியிருந்த சேலையை கழுத்தில் சுற்றி விளையாடிய போது எதிர்பாராத விதமாக சேலை கழுத்தை சுற்றி இறுக்கியது. இதனால் மூச்சு விட முடியாமல் தவித்த ராசைய்யா ஊஞ்சலில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

அப்போது அங்கு வந்த ராசைய்யாவின் சித்தப்பா ஏழுமலை ஊஞ்சல் சேலை இறுகி ராசைய்யா மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு மீஞ்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ராசைய்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரைந்து சிறுவன் ராசைய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர் ஊஞ்சலில் விளையாடியபோது சேலை கழுத்தில் இறுக்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்