சென்னை
பட்டத்தை பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி - உடல் உறுப்புகள் தானம்
|பட்டம் பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியானார். அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
சென்னை சூளைமேடு பாரதியார் சாலையில் வசித்து வருபவர் தண்டபாணி. கூலித்தொழிலாளி. இவருடைய 2-வது மகன் பிரசன்னா (வயது 13). நேற்று முன்தினம் மாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வானத்தில் பறந்து வந்த பட்டத்தை பார்த்த பிரசன்னாவும் அவனுடைய நண்பர்களும் அதை படிக்க முயற்சித்தனர். பட்டம் ஒரு வீட்டின் மாடியில் இருந்ததை பார்த்து அதில் ஏறி எடுக்க சென்றனர். அதற்குள் அந்த பட்டம் அருகில் உள்ள மற்றொரு மாடிக்கு பறந்து சென்றுள்ளது. இதையடுத்து பிரசன்னா அந்த பட்டத்தை பிடிக்க அருகில் இருந்த மாடிக்கு தாவி குதிக்க முயற்சித்துள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி, 2-வது மாடியில் இருந்து பிரசன்னா கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினரும், சிறுவன் பிரசன்னாவின் குடும்பத்தினரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சிறுவன் பிரசன்னா உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சோகம் நிலவியது.
இதுதொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் பிரசன்னா, தன்னுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்திருந்தார். அதன்படி, பிரசன்னாவின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு இருக்கிறது என்றும், குழந்தைகளை பெற்றோர் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றும் சிறுவனின் தந்தை தண்டபாணி தெரிவித்தார்.