விழுப்புரம்
பள்ளி வளாகத்தில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீச்சு
|செஞ்சி அருகே பள்ளி வளாகத்தில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு தொப்புள் கொடியுடன் அழகான ஆண்குழந்தை ஒன்று கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இது குறித்து அங்குள்ள மக்களிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் பள்ளி வளாகத்திற்கு விரைந்து சென்றுபார்த்தனர். பின்னர் அவர்கள் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் அந்த குழந்தையை பள்ளி வளாகத்தில் யாரோ வீசிவிட்டு சென்றது தெரிந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவலின் பேரில் அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த குழந்தை யாருடையது, எதற்காக பள்ளி வளாகத்தில் வீசிவிட்டு சென்றார்கள், கள்ளத்தொடர்பில் பிறந்ததால் குழந்தையை வீசிவிட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து ஒரு மணி நேரமே ஆனநிலையில் ஆண் குழந்தையை பள்ளி வளாகத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.