திருவள்ளூர்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
|சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமி, அரசுபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி வயிற்று வலி இருப்பதாகப் பெற்றோரிடம் கூறியதால், ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து பெற்றோர் சிறுமியிடம் தீவிரமாக விசாரித்ததில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதேகிராமத்தைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்ற நபர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை ஜீவரத்தினத்தின் நண்பர்கள் 2 பேர் புகைப்படம் எடுத்து வைத்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்த ஜீவரத்தினத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள சின்ராசு, சத்யா ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.