திருச்சி
வாலிபரை தாக்கி 4½ பவுன் சங்கிலி, செல்போன் பறிப்பு
|வாலிபரை தாக்கி 4½ பவுன் சங்கிலி, செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
சங்கிலி பறிப்பு
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 33). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தாயகம் திரும்பினார். இவர் சம்பவத்தன்று திருவானைக்காவல் சோதனைச்சாவடி அழகிரிபுரம் டாஸ்மாக் கடை பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரது முகத்தில் சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலி மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் செல்வம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாலிபர் கைது
* திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர் தனது மோட்டார் சைக்கிளை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கோவை பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு சென்றார். அப்போது மணப்பாறை பகுதியை சேர்ந்த மகேந்திரன் (19) என்பவர் போலி சாவி மூலம் அந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்றார்.
இதைக்கண்ட மணிகண்டன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகேந்திரனை பிடித்து கண்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.
* காஞ்சீபுரம் அலுந்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(82). இவர் திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பார்சல் அலுவலகம் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் தன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
*திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டல் முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார், இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர்கள் சிக்கினர்
* திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் உறையூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (23), காளீஸ்வரன் (21), ராம்ஜிநகர் ஆறுமுகம் (52), அரியமங்கலம் சக்தியேந்திரன் (27), திருவானைக்காவல் ரஞ்சித் (22), தாராநல்லூர் குமரவேலு (64) ஆகியோர் திருச்சி மாநகரில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.