திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது
|ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைதானார்.
ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி அடுத்து உள்ள கொல்லபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 75).
இவர் கடந்த 23-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். மறுநாள் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அதே கிராமத்தில் வசிக்கும் அவரது மகள் ஜெயலட்சுமி (51) வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. பின்னர் அவர் காதில் அணிந்திருந்த கம்மல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வலது காதில் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி மற்றும் கழுத்தில் தங்க சங்கிலி அப்படியே இருந்தது.
இதுகுறித்து ஜெயலட்சுமி பென்னாலூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தர். இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலையாளியை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஏட்டுகள் ராவ்பகதூர், செல்வ ராஜ், லோகநாதன் ஆகியோர் தலைமையில் சிறப்பு படை அமைத்து தேடினர்.
இதையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கொலையை நிகழ்த்தியது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலீசாரிடம் தீபாவளி செலவுக்காக பணம் இல்லாததால் நள்ளிரவில் எல்லம்மாளின் வீட்டில் நுழைந்து பீரோவை திறந்து கொள்ளையில் ஈடுபட்ட போது அவர் பார்த்து விட்டார். எனவே இதை வெளியில் யாரிடமாவது சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் எல்லாம்மாள் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் அணிந்திருந்த ஒரு கம்மலை மட்டும் பறித்து விட்டு தப்பியதாக தெரிவித்தார்.