தென்காசி
புளியங்குடியில் பாலியல் தொந்தரவு குறித்து போனில் பள்ளி மாணவி புகார்- போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது
|புளியங்குடியில், பாலியல் தொந்தரவு குறித்து பள்ளி மாணவி போன் மூலம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணைக்கு பின் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை கைது செய்தனர்
புளியங்குடி:
புளியங்குடியில், பாலியல் தொந்தரவு குறித்து பள்ளி மாணவி போன் மூலம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணைக்கு பின் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை கைது செய்தனர்.
கொத்தனார்
தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடியை சேர்ந்த புணமாலை என்பவரது மகன் முத்துசாமி (வயது 50). கொத்தனார்.
இவர் கடந்த 18-ந்தேதி ஒருவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியான சிறுமியை பாலியல் ரீதியில் முத்துசாமி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
போனில் புகார்
இதுகுறித்து அந்த மாணவி கடந்த 21-ந்தேதி, குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொலைபேசி எண்ணான 1098-க்கு போன் செய்து புகார் செய்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்தும், தொந்தரவு கொடுத்தவர் குறித்தும் தைரியமாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அருண் பிரசாத் தலைமையிலான குழுவினர், புளியங்குடி பகுதிக்கு விரைந்து வந்து மாணவியிடம் நேரடியாக விசாரித்தனர். அதில் மாணவியான அந்த சிறுமிக்கு, முத்துசாமி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
கைது
இதையடுத்து முத்துசாமி மீது புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார், முத்துசாமி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.