சென்னை
ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாயில் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை தாங்கி பிடிக்கும் பொக்லைன் எந்திரம் - பொதுமக்கள் அச்சம்
|ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தால் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை பொக்லைன் எந்திரம் மூலம் முட்டு கொடுத்து வைத்து இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் இந்த பணிகள் முழுமையாக முடிவடையாததால் விபத்துகள் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னை ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த பத்திரிகையாளா் முத்துகிருஷ்ணன் இரும்பு கம்பிகள் குத்தியதால் உயிரிழந்தார்.
இதையடுத்து முக்கிய சாலைகளில் மழைநீர் கால்வாய் பணிகள் நடக்கும் பகுதியில் பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்தும், துணியால் கட்டியும் வைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த ஆலந்தூர், கிண்டி, மடுவின்கரை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைகாலங்களில் தேங்கும் தண்ணீர் வேளச்சேரி ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் கிண்டியில் இருந்து ஆதம்பாக்கம் வரை உள்ள சிட்டி லிங்க் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி அருகே மழைநீர் கால்வாய்க்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டியபோது அங்கிருந்த மின்சார கம்பம் சாய்ந்த நிலையில் இருந்தது.
இதனால் பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அதில் கட்டி முட்டுகொடுத்து உள்ளனர். இந்த சாலை புறநகர் பகுதியில் இருந்து கிண்டி செல்லக்கூடிய முக்கிய சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை தாங்கி பிடிக்கும் பொக்லைன் எந்திரத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசினாலோ, மழை பெய்தாலோ அந்த மின்கம்பம் சரிந்து விழும் ஆபத்து உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழைநீர் கால்வாய் பணியை முடிக்காமலும், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்யாமல் இருப்பதால், விபரீதம் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.