< Back
மாநில செய்திகள்
பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்; 12 பேர் காயம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்; 12 பேர் காயம்

தினத்தந்தி
|
8 Jan 2023 3:05 PM IST

பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கொண்டதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று காலை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு ஆம்னி பஸ், முன்னால் சென்ற கார் மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அதற்கு முன்னால் சென்ற லாரியில் மோதி பின்பக்கத்தின் அடியில் சிக்கி கொண்டது. லாரி அதற்கு முன்னால் சென்ற வேன், கார் மீது மோதியது. இதனால் அடுத்தடுத்து ஆம்னி பஸ், கார், லாரி, வேன், கார் என 5 வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஆம்னி பஸ் முன்பக்கம் சேதம் அடைந்து கண்ணாடிகள் நொறுங்கியது.

காரின் பின்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. முன்பக்கம் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டு நசுங்கியது.

இதேபோல லாரி, வேன் மற்றொரு கார் போன்றவையும் பலத்த சேதம் அடைந்தது. இதில் கார் டிரைவர், ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 12 பேர் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்