< Back
தமிழக செய்திகள்
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய ஐ.டி. ஊழியர் தற்கொலை - திரும்ப செலுத்த முடியாததால் விரக்தி
சென்னை
தமிழக செய்திகள்

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய ஐ.டி. ஊழியர் தற்கொலை - திரும்ப செலுத்த முடியாததால் விரக்தி

தினத்தந்தி
|
4 Oct 2022 9:48 AM IST

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய ஐ.டி. ஊழியர், கடனை திரும்ப செலுத்த முடியாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசராஜா. இவருடைய மகன் நரேந்திரன் (வயது 23). இவர், ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை நரேந்திரனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார்.

வெளியே சென்றிருந்த நரேந்திரனின் பெற்றோர், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது நீண்டநேரம் ஆகியும் போனை எடுக்கவில்லை. இதனால் நரேந்திரனின் மாமாவை வீட்டுக்கு சென்று பார்க்குமாறு அறிவுறுத்தினர்.

அவர் வீட்டுக்கு சென்று நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு நரேந்திரன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார், தற்கொலை செய்த நரேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

நரேந்திரன் பல்வேறு ஆன்லைன் கடன் செயலிகளின் மூலம் பல ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடனை உடனடியாக திரும்ப கட்டச்சொல்லி நரேந்திரனுக்கு செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. அவர் போனை எடுக்காவிட்டால் அவரது உறவினர்கள் செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டு நரேந்திரன் வாங்கிய கடனை திரும்ப கட்டும்படி வற்புறுத்தி வந்தனர்.

இதனால் விரக்தி அடைந்த நரேந்திரன், தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், நரேந்திரனை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்