சிவகங்கை
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
|ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
100 சதவீத மானியத்தில்
கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் (அரசு விதிகளுக்கு உட்பட்டு) ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் அல்லது சோலார் மோட்டாருடன் நுண்ணீர்பாசன வசதி அமைத்து தரப்படும் என்றும். பவர் டில்லர் மானியத்தில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அதன்படி மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள 68 பாதுகாப்பான கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2022-2023-ம் ஆண்டிற்கு 113 பாதுகாப்பான கிராம பஞ்சாயத்துக்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டார் உடன் நுண்ணீர் பாசன வசதியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
பயன்பெறலாம்
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகம் அல்லது வட்டார அளவிலான உதவிப் பொறியாளர்களை அணுகி பயன்பெறலாம். இத்திட்டத்திற்கு ஏற்றவாறு ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சார அல்லது சோலார் பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்றவை அமைத்து கொள்ளலாம்.
அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் நிறுவ வேண்டும் என்றால் அதற்கான கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
35 பண்ணைக்குட்டைகள்
மேலும் 2021 -2022 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பவர்டில்லா் வழங்கப்பட்டு வருகிறது. 2022 - 2023-ம் ஆண்டுக்கு 35 பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
மேலும், சூரிய மின்மோட்டார், சூரிய கூடார உலர்த்தி மற்றும் பழைய மின் மோட்டார்களை மாற்றி புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.