< Back
மாநில செய்திகள்
பூம்பூம் மாட்டுக்காரர்கள் சமையல் செய்து போராட முயற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பூம்பூம் மாட்டுக்காரர்கள் சமையல் செய்து போராட முயற்சி

தினத்தந்தி
|
21 July 2023 6:45 PM GMT

வீட்டுமனைப்பட்டா கேட்டு பூம்பூம் மாட்டுக்காரர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சமையல் செய்து போராட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் பூம் பூம் மாட்டுக்கார மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்லகச்சேரி, புதுபல்லகச்சேரி, தண்டலை, பி.தாங்கள், சூளாங்குறிச்சி, வேளனந்தல், புக்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்கார மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தங்களுக்கு ஒரே இடத்தில் இடம் தேர்வு செய்து இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதற்கு வட்ட செயலாளர் மஞ்சப்பன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் கருணாநிதி, துணை தலைவர் மாயவன், பொருளாளர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த போராட்டத்தில். பூம்பூம் மாட்டுக்கார சமூகத்தை சேர்ந்த பெண்கள் சமையல் செய்து சாப்பிடுவதற்காக பாத்திரம் வைத்து அடுப்பை பற்ற வைக்க முயன்றனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் தாசில்தார் (பெறுப்பு) பாலகுரு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படு்ம் என தாசில்தார் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சமையல் செய்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்