அரியலூர்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு 29-ந் தேதி வரை நீட்டிப்பு
|முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு 29-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2022-23 மாநிலம் முழுவதும் இந்த மாதம் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக நடத்தப்படவுள்ள இந்த விளையாட்டு போட்டிகளில், பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட உள்ளது.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இணையதளம் வழியாக பதிவு செய்ய 23-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அதனை 29-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
குழுப்போட்டிகள்
அரசு ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். தனிநபர் போட்டிகள் மற்றும் குழுப்போட்டிகளில் மாவட்ட அளவில் நடத்திட ஒரு தனிநபர் போட்டிக்கு குறைந்தது 8 நபர்கள் அல்லது 8 அணிகள் இருந்தால் மட்டுமே மாவட்ட அளவில் போட்டிகளை நடத்திட முடியும். இல்லையெனில் மண்டல அளவிலான போட்டிகளில் மட்டுமே பங்கேற்க இயலும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்களை 7401703516 (பெரம்பலூர்), 7401703499 (அரியலூர்) என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள் அதிகளவில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் www.sdat.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்து, போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.