சென்னை
'ஆன்லைன்' மூலம் முன்பதிவு: சென்னை அழகு நிலையத்தில் நூதன முறையில் விபசாரம்
|சென்னை அழகு நிலையத்தில் ‘ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்து நூதன முறையில் விபசாரம் செய்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அழகு நிலையம் போர்வையில் விபசார தொழில் நடைபெறுவதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் நேரடியாக பணம் வாங்காமல் 'ஆன்லைன்' மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து மிகவும் ரகசியமாக விபசார தொழில் நடைபெற்று வருவது தெரியவந்தது. அந்த அழகு நிலையத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு நேற்று மாறுவேடத்தில் சென்றார்.
அப்போது அங்கு இருந்த வாலிபர் ஒருவர், முன்பதிவு எண்ணை சொல்லுங்கள் என்று கேட்டு மாட்டிக்கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த அழகு நிலையத்தில் அதிரடியாக சோதனை நடத்திய போது அங்கு 5 அறைகளில் மணிப்பூர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பெண்களும், சென்னையை சேர்ந்த 3 இளம்பெண்களும் மாடல் உடையில் இருந்தனர். போலீசார் 5 பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
விபசார தொழிலில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த அருள் (வயது 22) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இங்கு விபசார தொழிலை நடத்தியவர் அருளிடம் பொறுப்பை ஒப்படைத்து சென்றுள்ளார். அருள், விபசாரத்தில் புதிய தொழில்நுட்பத்தை கையாண்டு வந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேபோல் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், குமணன்சாவடி குன்றத்தூர் மெயின் ரோடு மற்றும் போரூர் ஆகிய 3 இடங்களில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக புவனேஸ்வரி (35), முரளிகுமார் (50), ஜெயலட்சுமி (39), சிவா (29) மற்றும் சுபாஷ் பாண்டே (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.