விருதுநகர்
மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி
|மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு மே மாதம் விடுமுறை அளித்து அதன் சிறப்பு அலுவலர் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களை நூலகங்களுக்கு அழைத்து சென்று வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 'கோடை புத்தகம் வாசிப்புக் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி நடத்த அவர் அறிவுறுத்தினார். அதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வரும் தைலாகுளம், என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்பட்டி, மடவார்வளாகம், இனாம்கரிசல்குளம் உள்ளிட்ட இல்லம் தேடி கல்வி மையங்களின் தன்னார்வலர்கள், தங்களது மையத்திற்கு வரும் மாணவ-மாணவிகளை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு நூலகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை நூலகர் மலரவன் வரவேற்றார். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் மாணவர்களுக்கு நூலகத்தின் நடைமுறைகள் மற்றும் வாசிப்பு பழக்கத்தினால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் ராமலட்சுமி, முத்துச்செல்வி, அருணாதேவி, சிவரஞ்சனி, காவியா, சிவகாமி, கஸ்தூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.