கடலூர்
குண்டும், குழியுமான போக்குவரத்து அலுவலக சாலை ரூ.3 லட்சம் நிதி வழங்கியும் சீரமைக்கப்படாத அவலம்
|கடலூர் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கிடக்கிறது. இதை சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கியும் இந்த அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
குண்டும், குழியுமான சாலை
கடலூர் கேப்பர்மலை பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் பெறுவதற்காக வாகன ஓட்டிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இது தவிர இங்கு வாகனங்களின் பதிவுச்சான்று, புதுப்பித்தல் சான்று மற்றும் தகுதிச்சான்றை புதுப்பித்தலுக்காகவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வருகிறார்கள்.
இது தவிர அரிசிபெரியாங்குப்பத்திற்கும் இந்த சாலை செல்கிறது. ஆனால் இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தார்சாலை முழுவதும் சேதமடைந்து ஜல்லிகள் மட்டுமே உள்ளது. அந்த ஜல்லிகள் கூரான ஆயுதம் போல் உள்ளதால் வாகனங்களில் உள்ள டயர்களை பஞ்சர் ஆக்கி விடுகிறது. அதோடு டயரும் வீணாகி விடுகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
பல இடங்களில் பள்ளமும், மேடாகவும் காட்சி அளித்து வருவதால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை கடக்க அவதி அடைந்து வருகின்றனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலையை கடக்க 10 நிமிடங்கள் ஆகும் அளவுக்கு மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் பணி பாதிக்கப்படுகிறது.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை சீரமைக்க கடலூர் ஒன்றியத்தை சேர்ந்த கரையேறவிட்டக்குப்பம் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தில் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.3 லட்சம் நிதி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.
சீரமைக்க வேண்டும்
அதன்பிறகு கடலூர் ஒன்றிய நிர்வாகம் ரூ.19½ லட்சம் நிதியில் சாலையை சீரமைக்க உள்ளதாக தெரிவித்தது. ஆனால் இது வரை இந்த சாலை சீரமைக்கப்பட வில்லை. இதனால் நாள்தோறும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆகவே ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம் இதில் தனிகவனம் செலுத்தி, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.