ராமநாதபுரம்
பாம்பன் கடற்கரையில் தேடும் பணி தீவிரம்
|பாம்பன் கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என பாம்பன் கடற்கரையில் தேடும் பணி நேற்றும் தீவிரமாக நடந்தது.
ராமேசுவரம்,
பாம்பன் கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என பாம்பன் கடற்கரையில் தேடும் பணி நேற்றும் தீவிரமாக நடந்தது.
வெடிகுண்டுகள்
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் அக்காள்மடம் கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியில் பரவிவரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அங்கு முகாமிட்டு, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கடற்கரையில் அதிக ஆழத்தில் ஏதாவது வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருக்கிறதா? என சல்லடை போட்டு தேடிவருகிறார்கள்.
இந்த தேடும் பணி நேற்று முன்தினம் நடந்தபோது, கடற்கரையில் பல இடங்களில் சிறிய கம்புகளை நட்டு அடையாளப்படுத்தி இருந்தனர். அந்த இடங்களில் நேற்று வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தோண்டுவதற்கு முடிவு செய்தனர். அதற்காக பாம்பன் அக்காள் மடம் கடற்கரை பகுதிக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. 3 அடி ஆழம் வரையிலும் தோண்டப்பட்டது.
மூடப்பட்ட பள்ளங்கள்
தோண்டப்பட்ட இடங்களில் டிடெக்டர் கருவியை வைத்து வெடிகுண்டுகள், ஆயுதங்கள், தோட்டாக்கள் ஏதேனும் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தேடும் பணி மாலை 6 மணி வரையிலும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு உள்ளிட்ட எந்த ஒரு பொளும் போலீசாரால் கைப்பற்றப்படவில்லை. இதை தொடர்ந்து கடற்கரை பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டன.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் போர் நடந்த போது இலங்கையில் இருந்து தப்பி வந்த விடுதலை புலிகள் சிலர் வெடிகுண்டு, துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்களை அந்த கடற்கரையில் குழி தோண்டி புதைத்து வைத்திருக்கலாம் என போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த தேடும் பணி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.