< Back
மாநில செய்திகள்
சென்னை வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
27 Dec 2022 3:00 PM IST

குருவாயூரில் இருந்து சென்னை வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று இரவு மர்மநபர் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அப்போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை கடந்து சிங்கபெருமாள் கோவில் பகுதியில் வந்து கொண்டிருந்தது. உடனடியாக இது தொடர்பாக தாம்பரத்தில் உள்ள ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம் ரெயில் நிலையம் வந்ததும் 5-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டு அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 'டயானா' என்ற மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடைபெற்றது.

மேலும் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்களும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதுமாக சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ரெயிலில் முழுமையான சோதனை நடத்திய பிறகே தாம்பரத்தில் இருந்து எழும்பூர் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் எழும்பூர் செல்ல வேண்டிய பயணிகள் ரெயிலில் இருந்து இறக்கப்பட்டு சோதனைக்கு பிறகு மின்சார ரெயில்கள் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இரவு 7.50 மணி முதல் 1 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர். சுமார் 1 மணி நேரம் தாமதத்துக்கு பிறகு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து எழும்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்