< Back
மாநில செய்திகள்
சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை
மாநில செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
22 Jun 2023 12:20 PM IST

சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 1 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு உடனே இணைப்பை துண்டித்தார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே போலீசார், பூக்கடை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். 2 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் இது புரளி என தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் வியாசர்பாடி மல்லிகை பூ காலனியை சேர்ந்த லாரி டிரைவர் ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன் (வயது 21) என்பது தெரியவந்தது. இவர், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மணிகண்டனை வீட்டிற்கு பெற்றோர் அழைத்து வந்த நிலையில், நேற்று மதியம் தந்தையின் செல்போனை எடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

ஏற்கனவே, மணிகண்டன் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு மிரட்டல் விடுத்திருந்தார். இந்த நிலையில், நேற்று 2-வது முறையாக மணிகண்டனின் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனால், மணிகண்டன் பெற்றோரிடம் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். வெடிகுண்டு மிரட்டலால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்