சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
|பள்ளி வளாகங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை,
சென்னை அண்ணாநகர், ஜே.ஜே. நகரில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளி நிர்வாகங்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 13 பள்ளிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பள்ளி வளாகங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பெற்றோர்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.