ஒரேநாளில் 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
|3 விமான நிலையங்களிலும் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சென்னை,
கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு நேற்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. 3 விமான நிலையங்களின் இ-மெயில் முகவரிக்கும் அனுப்பப்பட்ட அந்த இ-மெயிலில் விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
உடனே விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையங்கள் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் 3 விமான நிலையங்களிலும் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தால் கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த வாரம் இந்த விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.