சென்னை
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி
|சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வருபவர்கள் அமருவதற்காக இருக்கைகள் உள்ளன. அந்த இருக்கையில் ஒரு மர்ம பை நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதனை கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்த பை யாருடையது? என விசாரித்தனர்.
ஆனால் யாருமே அந்த பையை உரிமை கோரி வரவில்லை. இதனால் அந்த பையில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. உடனடியாக மோப்ப நாயுடன் வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், அந்த பையை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. பின்னர் பையை சோதனைக்காக எடுத்து சென்றனர். அந்த பையை பாதுகாக்கப்பட்ட பகுதியில் வைத்து சோதனை செய்த போது அதற்குள் துணிகள் இருப்பது தெரிந்தது. பயணிகள் யாராவது அந்த பையை தவறவிட்டு சென்று இருக்கலாம் என்பதால் விமான நிலைய மேலாளரிடம் அந்த பை ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.