செங்கல்பட்டு
காஞ்சீபுரம் அருகே வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் கைது - வாகன சோதனையில் சிக்கினார்
|காஞ்சீபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டு குளம் ஜங்ஷனில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக கடக்க முயன்றது. அதை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரிக்க முயன்ற போது தப்பி ஓட முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை மடக்கி பிடித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் சோதனை செய்தனர். அந்த பெண் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது நாட்டு வெடிகுண்டு மற்றும் 2 பட்டா கத்திகள், கஞ்சா இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியை சேர்ந்த தமிழரசி (வயது 22), காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (25) என்பதும் மற்றொருவர் வசந்த் என்ற நொய் வசந்த் (22) என்பதும் தெரியவந்தது. தமிழரசி சில மாதங்களாக காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் தங்கி கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.
சண்முகம் பெட்ரோல் நிலைய கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் , வசந்த் 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தமிழரசியிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, பட்டா கத்திகள், கஞ்சா உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.