செங்கல்பட்டு
வண்டலூர் அருகே பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலி
|வண்டலூர் அருகே தொழிற்சாலையில் ராட்சத பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாய்லர் வெடித்தது
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் சிமெண்டு கற்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள்அங்கு தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தொழிலாளர்கள் சிமெண்டு கற்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் இருந்த ஒரு ராட்சத பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
சாவு
அப்போது அங்கு பணியில் இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த மிராஜ் (வயது 18) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஹெக்லத் (25), விழுப்புரத்தை சேர்ந்த யுவராஜ் (25) ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனடியாக அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ரத்தினமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காயார் போலீசார் விரைந்து சென்று தொழிற்சாலையில் உள்ள ராட்சத பாய்லர் எப்படி வெடித்தது என்பது குறித்து தொழிற்சாலை ஊழியர்களிடம் விசாரித்தனர். இந்த சம்பவ குறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.