திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே மாயமான பெயிண்டர் குளத்தில் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை
|கும்மிடிப்பூண்டி அருகே மாயமான பெயிண்டர் குளத்தில் பிணமாக மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி (வயது 40). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி ராதா (37) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற முரளி, திடீரென மாயமாகி போனார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்த நிலையில், மாதர்பாக்கத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சத்யவேடு செல்லும் சாலையில் உள்ள ஒரு குளத்தில் நேற்று மாலை முரளி பிணமாக மிதந்து கொண்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உறவினர்களை நேரில் அழைத்து சென்று குளத்தில் பிணமாக மிதந்து கொண்டிருந்தது முரளி என்பதை உறுதி செய்தனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.