சென்னை
பள்ளிக்கரணையில் விபத்தில் பலியான மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்
|பள்ளிக்கரணையில் விபத்தில் பலியான மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை மனோகர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருடைய மனைவி சாந்தா (வயது 70). இவர் கடந்த 17-ந் தேதி கோவிலுக்கு சென்று விட்டு பள்ளிக்கரணை குளம் எதிரே வேளச்சேரி பிரதான சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ேமாதியதில் படுகாயம் அடைந்த சாந்தா, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மூதாட்டி சாந்தா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியது. அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சாந்தாவின் 4 மகன்கள் மற்றும் உறவினர்கள், சாந்தாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து அதே தனியார் ஆஸ்பத்திரியில் அவரது இரு கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த தீனா (21) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.