காஞ்சிபுரம்
தண்டலம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
|தண்டலம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
மூளைச்சாவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட செல்லப்பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 44), இவருடைய மனைவி மாலினி. கடந்த 16-ந்தேதி சுதாகர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி நோக்கி சென்றார். தண்டலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுதாகரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சுதாகர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
உடல் உறுப்புகள் தானம்
ஏற்கனவே சுதாகர் நலமுடன் இருக்கும் போது கண் தானம் செய்வதாக மனைவி மாலினியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாலினி தனது கணவரின் கண், சிறுநீரகம், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக அளிக்க ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் தெரிவித்தார். மாலினியின் கோரிக்கையை ஏற்று சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சுதாகரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.