செங்கல்பட்டு
மறைமலைநகர் அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்பு; தற்கொலையா? போலீசார் விசாரணை
|கர்நாடகா நண்பருடன் ஒரே வீட்டில் தங்கி இருந்த வாலிபர் விவசாய கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெற்றோர் கண்டித்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 21), பி.காம் பட்டதாரியான இவர், கோகுலாபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது உறவினர் வீட்டு மாடியில் கர்நாடகா மாநிலம் சிக்மங்களூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் (22) தங்கி இருந்து கார்த்திக் வேலை செய்யும் அதே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதனால் கார்த்திக், லோகேஷ் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். கார்த்திக் அடிக்கடி லோகேஷ் குடியிருக்கும் வீட்டுக்கு சென்று வந்தார்.
லோகேஷ், கார்த்திக் இருவரும் அடிக்கடி ஒன்றாக சுற்றி வந்தனர். இதனால் கார்த்திக்கின் பெற்றோர் தனது மகனை கண்டித்தனர்.. இதனால் கார்த்திக் அவரது வீட்டை விட்டு வெளியேறி நண்பர் லோகேஷ் தங்கி இருந்த வீட்டுக்கு சென்று தங்கினார். இதனை அறிந்த லோகேஷின் பெற்றோர் இருவரையும் கண்டித்து உள்ளனர். இதனால் கார்த்திக், லோகேஷ் இருவரும் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் உள்ள வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினர்.
பிணமாக மீட்பு
நேற்று முன்தினம் கார்த்திக் வீட்டிலேயே இருந்தார். லோகேஷ் மட்டும் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் அவர் தங்கி இருந்த அறைக்கு வந்து பார்த்தபோது கார்த்திக்கை காணவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் இதுகுறித்து கார்த்திக்கின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கார்த்திக்கின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் லோகேஷ் பல்வேறு இடங்களில் கார்த்திக்கை தேடினர். அப்போது சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த விஞ்சியம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணறு அருகே கார்த்திக்கின் செருப்பு இருப்பதை லோகேஷ் பார்த்து இது கார்த்திக்கின் செருப்பு என்று அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து உடனடியாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி மர்மமான முறையில் இறந்து கிடந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலையா?
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தனது நண்பர் லோகேஷுடன் நெருங்கி பழகி வந்ததை பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே கார்த்திக் தங்கி இருந்த அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
கடிதம் சிக்கியது
அந்தக் கடிதத்தில் கார்த்திக் எழுதி வைத்திருப்பதாவது:-
என்னால நீ ரொம்ப கஷ்டப்படுறடா? உன் மீது தப்பில்லை, என் மீது தான் தப்பு, ஐ லவ் யூ பட்டு, ஐ லவ் யூ என்று காதலிக்கு கடிதம் எழுதுவது போல் எழுதி வைத்திருந்தார்.
இது குறித்து கார்த்திக்கின் பெற்றோரிடம் போலீசார் விசாரித்த போது இது என் மகன் எழுதிய கடிதம் இல்லை, இதில் ஏதோ மர்மம் உள்ளது என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கார்த்திக், லோகேஷ் இருவரும் ஓரினச்சேர்க்கையாளராக பழகி வந்து இருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் அவருடன் ஒரே அறையில் தங்கி இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லோகேஷிடம் மறைமலைநகர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.