வேடசந்தூர் அருகே 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரரின் உடல் அடக்கம்
|திருச்சி அருகே நடந்த விபத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கிலிராயன்(42). இவர் திருச்சியில் உள்ள ராணுவ மையத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.
தொட்டணம்பட்டியில் உள்ள அவரது தந்தை நடராஜனை கடந்த வாரம் பாம்பு கடித்ததில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் ராணுவ வீரர் சங்கிலிராயன் கடந்த வாரம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து தனது தந்தை நடராஜனை பார்த்துவிட்டு மீண்டும் திருச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மணப்பாறை அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார்.
இவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் விபத்தில் இறந்த சங்கிலிராயன் உடல் நேற்று மாலை வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திருச்சி ராணுவ படையினரின் 21 குண்டுகள் முழங்க சங்கிலிராயன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.